தமிழின் கவிதை இயக்கத்தை பற்றி பல்வேறு நூல்களை வாசித்த போது, பிரதானமாக ஈழத்தின் கவிதை இயக்கமும் தமிழுக்கு அம்மண்ணின் பங்களிப்பும் சொல்வதற்கரிது. திரு. ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூலில் பரவலாய் சிதறிக்கிடந்த கருத்துக்களை தொகுத்து வாசித்த போதும், இணையத்தின் நூலகம்.காம் இணைய தளத்தில் ஈழத்தின் பல்வேறு இலக்கிய வரலாறுகளை ஒப்பிட்ட போதும் தோன்றிய முயற்சியே இக்கட்டுரை.
ஈழத்து நவீன இலக்கியம் (செ. யோகராசா [http://noolaham.net/project/01/41/41.htm])
என்ற நூலில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் வரும் கருத்துக்களோடு முரண்படுகிறது. இருப்பினும் இவ்விரண்டு நூல்களும் ஈழத்து கவிதை இயக்கத்தினைக் குறித்த இருவேறு கோணங்களை பதிவுசெய்கின்றன. இவை இரண்டுமே வாசித்தறியவேண்டியவை.
புதுக்கவிதையின் ஆரம்ப காலகட்டமாகிய முப்பது நாற்பதுகளில் தமிழகத்தில் புதுக்கவிதை முன்னோடியான ந. பிச்சமூர்த்தி 1934ல் எழுதிய “காதல்” என்னும் கவிதையே தமிழின் முதல் புதிய கவிதை. தொடர்ந்து தமிழகத்தின் இலக்கிய இதழ்களில் புதிய கவிதை முயற்சிகள் வெளிவந்தன. ஆனால் ஈழத்தில் 1943ல்தான் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 13.6.43ல் வெளிவந்த ஈழகேசரியில் ‘ஓர் இரவினிலே’ என்ற நீண்ட வசன கவிதையை வரதர் எழுதியிருந்தார். ஈழத்தில் வெளிவந்த ‘முதல் புதுக்கவிதை இது என்று கூறலாம்’ என்கிறார் வல்லிக்கண்ணன்.
இருள் ! இருள் ! இருள் !
இரவிலே நடு ஜாமத்திலே
என் கால்கள் தொடும் பூமி தொடங்கி
கண்பார்வைக் கெட்டாத மேகமண்டலம்வரை
இருள் ! இருள் ! இருள் !
பார்த்தேன்.
பேச்சு மூச்சற்று
பிணம்போல் கிடந்தது பூமி.
இது பூமி தானா?’
என தொடங்கும் வரதரின் இந்த கவிதைப் பகுதியை மேற்கோளாகக் காட்டி,. இதே காலகட்டத்தில் “கலாமோகினி”யில் பிச்சமூர்த்தி எழுதிய “மழைக்கூத்து” என்ற கவிதை, ‘வரதருக்கு இயற்கைக் கூத்துகளை விவரிக்கும் கவிதையை எழுதத் தூண்டுதலாக அமைந்திருக்கலாம்’ என்கிறார் வல்லிக்கண்ணன். ஈழத்துப் படைப்பாளிகளூக்கு தமிழகத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களோடு தொடர்பு இருந்து வந்தது. கலாமோகினி, கிராம ஊழியன் இதழ்களில் அவர்களுடைய படைப்புகளும் வெளிவந்துள்ளன.
‘அகக்காரணிகளும் புறக்காரணிகளும் ஓன்றிணைந்தே நவீன ஈழத்துத் தமிழ்கவிதையை உருவாக்கியுள்ளன’ என்று கூறும் க. கைலாசபதி, புறக்காரணிகள் என்று குறிப்பிடுவது தமிழகத்துக் கவிதைகளின் தாக்கங்களைத்தான். ஈழத்தில் ‘புதிய அரசியல்-சமுதாய பாடல்கள் தோன்றுவதற்கு’ பாரதி பாடல்கள் தூண்டுகோலாய் அமைந்தன என்றும் அவர் கூறுகிறார் (பாரதி ஆய்வுகள் : ப.217) அது போல் ஈழத்தில் புதுக்கவிதை தோன்றுவதற்கும் தமிழகத்துக் கவிதைச் சூழல்தான் காரணம் என்று கூறலாம். கா. சிவத்தம்பியின் கருத்தும் இதனை உறுதிப்படுத்துகிறது. ‘ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதை 1942ல் தொடங்கப்பெற்ற “மறுமலர்ச்சி” சஞ்சிகையுடன் ஆரம்பமாகிறது. ஆனால் 1930ல் தொடங்கிய “ஈழகேசரி” காலம் முதலே கவிதையில் நவீனத்துவம் படிப்படியாக வளரத் தொடங்குகிறது. அல்வாய் மு.செல்லையா இவ்வகையில் முக்கியமாகிறார். மறுமலர்ச்சியுடன் தொடங்கும் கவிதைப்போக்கு பாரதியை மையமாகக் கொண்டது’ என்றும், ‘தமிழகத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளரான கு.ப.ரா, பிச்சமூர்த்தி ஆகியோரின் செல்வாக்குக்குட்பட்டே வசன கவிதை ஈழத்திலும் தொடங்குகிறது. (உ.ம்) வரதர். ஆனால், புதுக்கவிதையை அதன் இலட்சணப்பொலிவுடன் கையாளத் தொடங்கியவர்களுள் ஈழத்தைப் பொறுத்தவரை முக்கியமானவர் தா.ராமலிங்கம் ஆவார்’ என்றும் கா.சிவத்தம்பி கூறுகிறார். (புறநானூறு முதல் புதுக்கவிதை வரை: பக்.30-31)
ஆனால் ஈழத்தில் புதுக்கவிதை ‘சுத்த சுயம்பு’வாகத் தோன்றியது என்ற கருத்தும் அங்குண்டு. சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இதழ் மூலம் தமிழகத்தில் புதுக்கவிதை ஓர் இயக்கமாக வளர்ந்து இலக்கிய வடிவங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுவிட்டதைக் குறிப்பிடும் சோமகாந்தன், ‘ஆனால் புதுக்கவிதை என்று பேசப்படுவதற்கு பல காலத்துக்கு முன்னரே “மறுமலர்ச்சி”யில் வரதர் இவ்வாறான சில கவிதைப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை எத்தனை இலக்கியவாதிகள் அறிவர்?’ என்கிறார். (நிகழ்வுகளும் நினைவுகளும்: ப.154). முப்பதுகள் நாற்பதுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய கவிதை முயற்சிகளை அறியாததன் விளைவாக எழுந்த கேள்வியே இது.
ஈழத்தில் புதுக்கவிதை முயற்சி தொடங்கப்பட்டுச் சில ஆண்டுகளிலேயே ‘சோர்வுற்றுத் தூக்கநிலை அனுபவித்த’தாகவும் இதற்குக் காரணம் தமிழகத்தைப் போலவே புதிய கவிதை முயற்சிகளுக்கு ஆதரவளித்த இலக்கிய இதழ்களின் மறைவும் படைப்பாளிகளின் சோர்வு மனப்பான்மையுமே காரணம் என்கிறார் வல்லிக்கண்ணன்.
நாற்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்தில் வரதர், சோ.தியாகராஜர், அ.செ.முருகானந்தன், அ.நா.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், மஹாகவி போன்றவர்கள் “மறுமலர்ச்சி” என்ற இலக்கிய இதழையும் இரண்டாண்டுகள் நடத்தினர். ஈழத்தில் புதிய சிறுகதை முயற்சிக்கு இது களமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மறுமலர்ச்சிக் குழுவினரில் வரதர், சோ.தியாகராஜா (ஜோதி), விஜயன், தங்கம் போன்றவர்களே ஈழத்தில் புதிய கவிதை முயற்சியில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்கிறார் வல்லிக்கண்ணன்.
“மறுமலர்ச்சிக் கவிஞர்கள்” என்று குறிப்பிடப்படுபவர்கள் நாவற்குழியூர் நடராசன், சோ.தியாகராஜா, அ.நா.கந்தசாமி, மஹாகவி, சாரதா, க.இ.சரவணமுத்து முதலியோர் ஆவர் என்றும் ‘இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ.நா.கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் முக்கியமான கவிஞர்களாகின்றனர்’ என்றும் கூறுகிறார் கா.சிவத்தம்பி. (புறநானூறு முதல் புதுக்கவிதை வரை; ப.31). இவர்களில் நாவற்குழியூர் நடராசன் கவிதைகள் உருவ அமைப்பில் மரபுவழிக் கவிதைகளாகவே உள்ளன. ‘ஈழத்தின் சிறந்த மரபு கவிஞர்களில்’ ஒருவராகவே இவரைச் சிலோன் விஜயேந்திரனும் குறிப்பிடுகிறார். (ஈழத்துக் கவிதை நயம் : ப.107). நாற்பதுகளிலேயே எழுதத் தொடங்கினாலும் ஐம்பதுகள் அறுபதுகளில்தான் மஹாகவி ஈழத்தின் முதன்மையான நவீன கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.
தமிழகத்தில் புதுக்கவிதையின் தொடக்கக் காலத்தில் சிறுகதைப் படைப்பாளிகளான பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு போன்றவர்கள் புதிய கவிதை முயற்சியில் ஈடுபட்டனர். கவிதை என்றால் யாப்பிலக்கணத்தில் எழுதப்படுவதுதான் என்ற பண்டித மனோபாவத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கவிதைப்போக்கில் ஒரு சுதந்திரமான தாக்கத்தை ஏற்படுத்த இவர்களால் முடிந்தது. ஆனால் ஈழத்தில் இத்தகைய இலக்கிய ஆளுமை பெற்றவர்கள் புதிய கவிதை முயற்சியை மேற்கொள்ளவில்லை. எனவே நாற்பதுகளின் ஆரம்பத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்ட புதிய கவிதை முயற்சி ஈழத்துக் கவிதைச் சூழலில் எவ்விததாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஐம்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இலக்கிய இதழ் தோன்றிப் புதுக்கவிதை வளர்ச்சியடைந்த பின்னரே ஈழத்தில் அதன் பரவலான தாக்கமும் எதிர்வினையும் தீவிரமடைந்தது.
பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்துப் புதுக்கவிதை முயற்சிகளில் ஏற்பட்ட தேக்கநிலையை உடைத்துக்கொண்டு புதுக்கவிதை மறுமலர்ச்சியடைந்தது. “எழுத்து” காலகட்டத்தில் புதுக்கவிதை ஓர் இயக்கமாகவும் வளர்ந்து வலுப்பெற்றது. ஆனால் இதே காலகட்டத்தில்-அறுபதுகளில்-ஈழத்தில் புதுக்கவிதை வளர்ச்சி தமிழகம் அளவுக்கு சிறப்பாக இல்லை. மஹாகவியின் மரபு சார்ந்த புதிய கவிதை முயற்சி மற்றும் கைலாசபதி போன்ற முற்போக்கு விமர்சகர்களின் தமிழகத்துப் புதுக்கவிதைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள் இதன் காரணங்கள் எனலாம்.
‘1950, 65 இயக்க வேகத்துடன் தொடங்கப்பட்ட இலக்கிய இயக்கம் இலங்கையில் தோன்றும் தமிழிலக்கியம், இலங்கையை, இலங்கையின் பிரச்சனைகளை, அவற்றுக்குரிய ‘மண்வாசனை’யுடன் வெளிக்கொணருவனவாக இருத்தல் வேண்டுமென்பதையும் வற்புறுத்திற்று. தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டை வளர்த்தெடுப்பதற்கு இவ்வியக்கம் காரணமாக அமைந்தது. ‘தேசிய இலக்கியம்’, மண்வாசனை’ உடையதாக ‘யதார்த்த’ அடிப்படை யிலானதாகவிருத்தல் வேண்டும் என்பது பல்வேறு விவாதங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டது’ என்று அறுபதுகள் காலகட்ட ஈழத்து இலக்கிய போக்கைக் குறுப்பிடுகிறார் கா.சிவத்தம்பி. (ஈழத்து இலக்கியத் தடம்; 1980-2000. ப.30)
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் பாரதி- பாரதிதாசன் வழிக்கவிஞர், பரம்பரையினர் எழுதி வந்தது போன்ற தமிழ்த் தேசியம், பாரம்பரியப் பெருமைகளை விதந்தோதும் ஓசை நயம் மிகுந்த செய்யுள்களும் பாடல்களும் ஈழத்தில் எழுதப்பட்டன. எனினும் மஹாகவியின் கவிதைப் போக்கு, எவ்விதமான இயக்கம் சார்ந்தோ, பழம்பெருமைகளை பேசுவதாகவோ, கற்பனைகளில் பேசுவதாகவோ, கற்பனைகளில் மிதப்பதாகவோ அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை, சமூக முரண்பாடுகளை யதார்த்தமாகவும் அங்கதத்துடனும் சித்தரிப்பதாக அமைந்தது. அதற்கேற்ப அவர் மரபான செய்யுள் வடிவத்தைப் புறக்கணிக்காமல் பேச்சுவழக்குகளையும் பேச்சோசையையும் அதனுள் புகுத்தினார். தமிழகத்தில் கற்பனாவாத அலங்காரச் சொல்லடுக்குகளாகச் செய்யுள்களும் பாடல்களும் எழுதப்பட்ட காலத்தில் மஹாகவி யதார்த்தமான பார்வையில், இயல்பான பேச்சுமொழி நடையில் எழுதினார். இந்த புதிய கவிதைப்போக்கு ஈழத்து கவிதையில் பெரும் தாக்கத்தை நிகழ்வித்தது. தமிழகத்தில் இந்தக் காலகட்டத்தில் யாப்புருவத்தையும், எதுகை- மோனையில் உருவாகும் சப்த ஒழுங்கையும் கவனத்தில் கொள்ளாது, மௌன வாசிப்புக்குரிய புதுக்கவிதைகள் எழுதப்பட்ட சூழ்நிலைகளின் தொடக்கம் வரையிலும் ஈழத்துக் கவிதைகள் வாசிப்புக்குரிய வகையிலேயே சப்தநயம் தூக்கலாகக் கொண்ட நெகிழ்ச்சியான வடிவத்தில் அமைந்திருந்தமையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் புதுமைப்பித்தன் யாப்புருவத்தை முற்றாகப் புறக்கணிக்காமல் பேச்சு வழக்கினையும் புகுத்தி புதியதொரு செய்யுள் நடையில் கவிதைகள் எழுதினார். மஹாகவியின் கவிதையமைப்பும் ஒருவகையில் புதுமைப்பித்தனுடையது போன்றதுதான். புதுமைப்பித்தனைப் போலவே நகைச்சுவை கலந்த கிண்டலான சமூக விமர்சனமும் மஹாகவி கவிதைகளின் முக்கியப் பண்பாகும்.
‘ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன்.வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்’
இது மஹாகவியின் “தேரும் திங்களும்” கவிதையின் ஆரம்பப் பகுதி.
‘வயலினைப் பாலை
வனமாக்கு கின்ற
வெயிலுக்கு முன்னர் உழவர் விரைந்தெழுந்து
‘போயிலை’க்கு நீர் இறைக்கப்
போவார்கள்; போவழியில்
நாய்கள் விழித்துக்
குரைத்து நமை எழுப்பும்!
கோழிகளும் கொம்பிருந்து
கொட்டாவி விட்டெழுந்து
நாழியாய் விட்டதென
நாட்டுக் கறிவிக்கும்.’
இது “எங்கள் ஊர்” கவிதையின் ஆரம்பம்.
‘எண்ணம் எனக்குள்ள தொன்றே’
நீவீர்
ஏற்றுக்கொள் வீர்கள் எனில் மிக நன்றே!
உண்ணும் உணவினைப் போலே
நமக்கு
உற்ற தமிழ்! அதில் நாடகத்தாலே
திண்ணம், நிதி வந்து சேரும்
ஒன்றைத்
திட்டமிட்டுச் செய்வம்; யாவரும் வாரும்!
கண்ணியமும் கட்டுப்பாடும்
நல்ல
கடமையும் வெல்க! என்றாவன் நாடும்!’
இது “கண்மணியாள் காதை” காவியத்தில் வரும் ஒரு செய்யுள் பகுதி. இதுபோல் ஆசிரிய விருத்தப்பாவின் அடியினை, பேச்சுவழக்கின் தொனிக்கேற்பவும் அழுத்தம் கருதியும் உடைத்து, தனிச் சொல்லை வரியாக்கி அதேசமயம் யாப்புருவம் சிதையாமலும் மஹாகவி எழுதுவதுண்டு. நாடகங்களிலும் தனிப் பாடல்களிலும் இந்த உத்தியினை அதிகமும் இவர் கையாண்டிருக்கிறார்.
மஹாகவியின் கவிதை இயக்கம் குறித்து இவ்வாறு கூறுகிறார் சண்முகம் சிவலிங்கம்:
‘மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்திய தர வர்க்க முற்போக்குச் சிந்தனையை பிரதிபலித்தவர்.’
‘அன்றாட நிகழ்ச்சிகளினதும் அனுபவங்களினதும் அடிப்படையில் யதார்த்தபூர்வமாய், அல்லது மெய்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புகள் மூலம் அந்த சிந்தனையைப் புலப்படுத்தியவர்.’
அந்த யதார்த்தபூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய கட்டத்துக்கு வளர்த்தெடுத்தவர்.’ (மஹாகவியின் கொடை. ப.71)
இந்த காலகட்டத்தில் மஹாகவியின் “வள்ளி” (1955), “குறும்பா”(1966), “கண்மணியாள் காதை” (196
ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன.
ஈழத்துக் கவிதை விமர்சகர்களால் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறவர்ர் இ.முருகையன். ஐப்பதுகளில் எழுதத தொடங்கியவர். கவிதையின் உருவ அமைப்பில் பல சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டவர். மஹாகவியைப் போலவே இவரும் செய்யுள் நடையில் பேச்சோசை வழக்கையும் கலந்து எழுதியவர். அவரைப்போலவே சப்த ஒழுங்கையும் புறக்கணிக்காதவர். தனிமனித உணர்வுகளைப் பிரதானப்படுத்தாமல் சமுதாயப் பிரச்சினைகளைத் தன் கவிதைகளில் முதன்மைப்படுத்தியவர். ஆரம்ப காலத்தில் புதுக்கவிதைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்த போதிலும் காலமாறுதலுக்கேற்பப் புதுக்கவிதைகளும் எழுதத் தொடங்கியவர் முருகையன். இவரது “நெடும்பகல்” (1967) தொகுப்பிலுள்ளவை அனைத்தும் மரபுவழி உருவத்தில் அமைந்த கவிதைகள்தான். மரபார்ந்த செய்யுள் வடிவத்தில் முற்போக்குக் கருத்துருவங்களைக் கவிதையாக்கியவர் முருகையன்.
‘காற்றும், உயிர் நிறுத்த இயற்கை நல்கும்
காய்கதிர்ச் செல்வனது வெயிலொளியும்,
ஊற்று வழங்குகிற நீரும், எவையும்
உலகினர் யாவருக்கும் பொது அல்லவோ?
ஏற்றம் மிகுந்த அந்த இயற்கை தரும்
ஏனைய வற்றில் மட்டும் பேதம் எதற்கோ?
வேற்றுமை நூறு கண்டு நம்மிடையிலே
வீணிற் கலகம் பலநாம் வளர்க்கின்றோம்.’
இது முருகையன் ஆரம்பகாலத்தில் எழுதிய “எல்லாரும் வாழவேண்டும்” கவிதையின் முதல் பத்தி. (நெடும்பகல். ப.5) ஆசிரிய விருத்தத்தில் அமைந்தது.
மஹாகவியில் போலவே முருகையன் கவிதைகள் சிலவற்றிலும் புதுமைப்பித்தனின் தாக்கத்தைக் காணலாம். நெடும்பகல் தொகுப்பிலுள்ள “கல்நார் உரித்த கவி” கவிதை இவ்வாறு தொடங்குகிறது:
‘வேண்டும் கவிதை; விரைந்தனுப்பித் தாரும் என
‘நாண்டு’கொண்டு ‘நிண்டார்’ நம் ஆசிரியர்-
ஆண்டவனே
என்ன கரைச்சல்? இயலாது பாட்டெழுதல்.
பன்னம் இழைத்தாலும் பாய், கூடை-பின்னல்
கடகம், இவற்றுக்கும் காசு கிடைக்கும்.’ (ப.12)
இதே தொகுப்பிலுள்ள சரமகவிராயர் கவிதையிலும் (ப.121) புதுமைப்பித்தனின் தாக்கத்தை தூக்கலாகக் காணமுடியும்.
‘பழைய செந்தமிழ்ச் சொற்களோடு கிராமியம், வட்டார வழக்குகளையும், ஆங்கில சொற்களையும் தேவையை அனுசரித்து இலக்கியத்திற்குப் பயன்படுத்தும் நெறியை ஊக்கியமை முருகையனின் பங்களிப்பாகும்’ என்கிறார் கைலாசபதி. (பின்னிணைப்பு: மாடும் கயிறு அறுக்கும்; ப.216). புதுமைப்பித்தன் கவிதைகளில் பரிச்சமுள்ளவர்களுக்கு முருகையனின் இந்தப் பங்களிப்பு புதுமையாகத் தோன்றாது. ‘புதுமைப்பித்தன், ரகுநாதன் ஆகியோரின் எடுப்பான கவிதை முயற்சிகளால் உந்தப்பட்டவர் முருகையன்’ என்று கைலாசபதி அதே நூலின் பின்னிணைப்பில் குறுப்பிட்டுள்ளார்.
எழுத்து பிப். 1960 இதழில் ந.பிச்சமூர்த்தி ‘காதின் தொழிலைக் கண் ஏற்கமுடியும்’ என்று கவிதையின் மௌன வாசிப்பு குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிரொலியாக ‘உணர்ச்சி அனுபவங்களின் கதிகளை’
வெளிப்படுத்த, ‘வசன கவிதைக்காரர்கள் கையாளக்கூடிய ஒரே தந்திரம் அவர்கள் எழுதுகிற வசனங்களின் வரிகள் நீளத்தையோ அல்லது அந்த வரிகள் தொடங்குகிற இடத்தையோ தாம் விரும்பியவாறு அமைத்தல்’ (எழுத்து-மார்ச். 1960) என்று எழுதியிருக்கிறார் முருகையன். பின்னாளில் இவரே அந்தத் ‘தந்திர’ த்தைத் தன் கவிதைகளிலும்- மரபுருவ மற்றும் மரபை மீறிய கவிதைகளிலும்- கையாண்டிருக்கிறார்.
ஈழத்துக் கவிதைகளில் விஞ்ஞானக் கருத்துக்களைப் பொருத்தமாகக் கையாண்டிருப்பதையும் பேச்சோசைத் தன்மையையும் பேச்சுவழக்குச் சொற்களையும் கவிதைகளில் வெகு லாவகமாகக் கையாண்டிருப்பதையும் கைலாசபதி போன்றவர்கள் புதுமையென விதந்து கூறியதுண்டு. இவையெல்லாம் கவிதையின் அமைப்புச் சார்ந்த புதுமைகள் என்பது உண்மைதான் எனினும் ஒரு கவிதையின் சிறப்பம்சம் தனித்துவம், கலை வெற்றி இவற்றையெல்லாம் மீறிய அனுபவத்தின் தீவிரமான பதிவு சார்ந்தது; சுயமான பார்வையும், அதை வெளிப்படுத்தும் மொழியாளுமையும் சார்ந்தது; சுயமான பார்வையும், அதை வெளிப்படுத்தும் மொழியாளுமையையும் சார்ந்தது. அவ்வகையில் முருகையனின் கவிதைகள் கவித்துமான, வீர்யமான அனுபவ வெளிப்பாடுகளாக அமையவில்லை. விஞ்ஞான- புராண- யதார்த்த நிகழ்வுகளை மனோரீதியாக இணைத்துச் சிறப்பான கவிதையாக உருவாகியிருக்கும் பிரமிள் E=MC2 கவிதையுடன் முருகையனின் இத்தகைய கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இதனை நாம் உணர இயலும். எனினும் தமிழகத்திலும் ஈழத்திலும் அந்தக் காலகட்டத்தில் பெருவாரியாக எழுதப்பட்டு வந்த பாரதி- பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களின் பொற்காலக் கனவுகளாகவோ, அலங்காரச் சொல்லடுக்குக் குவியல்களாகவோ, இல்லாமல் புதிய விஷயங்களை மிகையுணர்ச்சி யில்லாமல் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது முருகையன் கவிதைகளில் கவனத்துக்குரியதாகும். மஹாகவியைப் போலவே இவரும் பல நாடகங்களும் குறுங்காவியங்களும் எழுதியிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களான நீலாவாணன், மு.பொன்னம்பலம் இருவரும் ஐம்பதுகளிலேயே எழுதத் தொடங்கியவர்கள். நீலாவாணனின் “வழி” 1976ல் வெளிவந்தது. இவரது கவிதைகள் மரபுவழிக் கவிதைகள்தாம். ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்தே கவிதை எழுதிவரும் மு.பொன்னம்பலத்தின் “அது” கவிதைத்தொகுதி 1968ல் வெளிவந்தது. சி.சிவசேகரம் ஐம்பதுகளிலேயே கவிதைகள் எழுத தொடங்கிவிட்டபோதிலும் எழுபதுகளில்தான் இவரது கவிதைகள் கவனத்தில் கொள்ளத்தக்கனவாகக் கருதப்படுகிறது.
‘அறுபதுகளில் ஈழத்தில் ‘மண்வாசனை’யை வலியுறுத்திய தேசிய இயக்கமும், இடதுசாரி இலக்கியப் போக்கும் தீவிரமாகச் செயல்பட்ட காலகட்டம். அரசியல் நிலைமையின் தாக்கத்தால் எழுச்சியடைந்த இலக்கிய இயக்கப் போக்குகள் இவை என்றும் சொல்லலாம். 1950, 60களில் முற்போக்கு இலக்கிய இயக்கம் வழிவந்தோர் ஒரு நிலையாகவும் அந்த இயக்கத்தின் வழிவராதவர்கள் இன்னொரு நிலையிலும் உள்ளனர். இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய அம்சம் யாதெனில், இன்று காத்திரமான எழுத்தாளர் எவரும் (அல்லது தம்மைக் காத்திரமான எழுத்தாளர்களாகக் கருதிக்கொள்பவர்கள் எவரும்) தம்மை மார்க்ஸிய எதிர்ப்பாளர்களாகக் காட்டிக்கொள்வதில்லை. மார்க்ஸிய நிறுவனங்களுள் ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டிருப்பார்’ என்கிறார் கா.சிவத்தம்பி. (ஈழத்துத் தமிழிலக்கியத்தடம்; 1980-200.ப.27) இதன் காரணமாகவே ஈழத்து கவிதை விமர்சகர்கள், கவிஞர்களில் பெரும்பாலனோரும் “எழுத்து” காலக் கவிதைகளைத் ‘தனிமனிதப் புலம்பல்கள்’ என ஒருமித்த குரலில் குறைகூறி வந்தனர். “எழுத்து” காலக் கவிதைகளில் அகவயமான கவிதைப் பார்வை தூக்கலாக இருந்தது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்தக் கவிதைப் போக்கையும் அவ்வாறு வகைப்படுத்தி விடவும் முடியாது. புதுக்கவிதையின் முன்னோடியான பிச்சமூர்த்தியின் கவிதைகள் சமுதாயப் பார்வை கொண்ட புறவயமான கவிதைகள்தாம். ‘தனிமையும் விரக்தியையும்’ தன்னை அண்டவிடாத தன்னம்பிக்கை கொண்ட கவிஞர் அவர். இடதுசாரி இலக்கியப் பார்வை அவரது கவிதைகளில் வெளிப்படாததால் - இயக்கங்களை மீறிய சுதந்திரமான கலைஞராக அவர் செயல்பட்டதால்-அவரையும் ஈழத்துக் கவிதை விமர்சகர்கள் ஏனைய “எழுத்து” காலக்கவிஞர்களுடன் சேர்த்தே நிராகரித்து வந்தனர்.
அறுபதுகள் காலக்கட்டத்தில் ஈழத்துத் தமிழ் புதுக்கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்தவர் தா.ராமலிங்கம். அறுபதுகளின் முற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவரது கவிதைகள் இந்தக் காலகட்டத்தில் இரண்டு தொகுதிகளாக “புதுமெய்க்கவிதைகள்” (1964) “காணிக்கை” (1965) வெளிவந்துள்ளன. ஈழத்துப் புதுக்கவிதையின் பொதுத்தன்மையான நெகிழ்ச்சியான அமைப்பு, தூக்கலான சப்த நயம், பேச்சோசைப் பண்பு நிறைந்தவை இவரது கவிதைகள். கிண்டலும் கேலியும் கலந்த அங்கத்துடன் சமுதாய விமர்சனப் பார்வை கொண்ட கவிதைகள் எழுதியவர். இவரது “ஆசைக்குச் சாதியில்லை” கவிதையின் முதல் பகுதி இது:
‘வேளார் குடிப் பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும்
மேல்சாதி நான்!
என்றாலும்
மருந்துக்கு நல்லதென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்?
கள் பருகச் சென்றேன்…
“எதிர்காலம்” கவிதையின் ஆரம்பம் வருமாறு:
‘இன்று சலூன்களிலே
கத்தரிக் கோல்களுக்கோ
ஓய்வு உளைச்சல் இல்லை.
நாங்கள்
நித்தம் முகம் வழித்துச்
சித்தம் சிதைந்துவிட்டோம்!
இனி
இயல்பாய் வளரட்டும்
இளைஞர்களே
சுயமாய் ஒளிவிடட்டும்
செயற்கை முறையினிலே
சேறு புழுக்கிறதே!
வாடிக்கையாய் நாங்கள்
வழிப்பயணம் செய்துவந்த
ஒற்றையடிப் பாதை
இனி உதவமாட்டாது!’
ஈழத்துக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் பிரமிளின் கவிதைகளையும் ஒப்பிட்டுக்காட்டி, ‘ஈழத்து இலக்கிய முயற்சிகளின் பாதிப்பு தருமுவிடம் பரவலாக விழுந்திருப்பதாகக்’ கூறுகிறார் சு.வில்வரத்தினம். (அலை; ஆடி-ஆவணி.1976) அவர் எடுத்துக்காட்டிய ஒப்பீட்டுக் கவிதையில் ஒன்று தா.ராமலிங்கத்தின் காணிக்கை கவிதை.
‘கதி வீசி முடி மினுங்கும்
கலைக்கோயில் முற்றத்துக்
கண்ணாடிப் பொய்கையொன்றில்
பொன்மீன் குடியிருத்த
அலைகடலில்
வலைவீசி துழாவுகையில்
ஓட்டில் கதிர் உதிக்கும்
நண்டு கிடைத்துள்ளது.’
(காணிக்கை. ப.3)
இதனுடன்,
‘திமிங்கிலம் பிடிக்க
கப்பலேறி
கடல் நீரில்
குழி பறித்தேன்
வந்து கவ்வி
வசப்படுமென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
புயல்.
நீர் சுழன்று குழிந்து
பிடிப்பட்டது
பிரளயம்’
(கைப்பிடியளவு கடல் ப.93)
என்னும் பிரமிளின் “கவிதை” என்ற தலைப்பிலான கவிதையை ஒப்பிட்டு தா.ராமலிங்கத்தின் கவிதையின் தாக்கம் இந்தக் கவிதையில் உள்ளதாகக் கூறுகிறார் வில்வரத்தினம்.
தா.ராமலிங்கத்தின் கவிதை படைப்பாளி மனநிலையின் எதிர்பார்ப்பினைக் காட்டிலும் நிகழ்வின் விளைவு ஏமாற்றம் தருவதாக அமைந்திருப்பதை வெளிப்படுத்துவது. ஆனால் பிரமிளின் கவிதையிலோ, எதிர்ப்புக்ளைக் காட்டிலும் நிகழ்வின் விளைவுகள் மேலான்மையாகச் சொல்லப்படுகின்றன. மேலும் பிரமிள் கவிதையில் வெளிப்படும் பன்முக அர்த்தத்தளமும் விரிவானது. எனவே ராமலிங்கம் கவிதையின் பாதிப்பில்
பிரமிள் கவிதை எழுதியப்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
எம்.ஏ.நு-மான், சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, வ.ஐ.சா.ஜெயபாலன் ஆகியோர் அறுபதுகளின் பிற்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கியவர்கள். இவர்களில் யேசுராசா, வா.ஐ.சா.ஜெயபாலன் தவிர்த்து ஏனைய இருவரும் எழுதிய காலக்கட்டத்துக் கவிதைகள் மரபு வழி யாப்புருவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்தவை.
எம்.ஏ.நு-மான், கவிதைகளுடன் இலக்கிய விமர்சனம், மொழியியல் துறைக்கட்டுரைகளும் எழுதுகிறவர். “கவிஞன்” என்னும் காலாண்டிதழை (1969-1970) நடத்தியவர். இவரது ஆரம்பக்காலக் கவிதைகள்,
‘அது ஒரு கொடும் வெயில் நாள்
ஆறுகள் வற்றினவே!
கொதிதணல் எனும் வெயிலின்
கொடுமைகள் முற்றினவே!
விதி இது என அவர்கள்
வீழ்ந்து கிடந்திலரே!
எதுவரை எனினும் அவர்
எழுந்து நடந்தனரே!’
என்பது போன்ற வகைமாதிரியாகவே அமைந்திருந்தன. பொதுவுடைமைச் சிந்தனையுடன் சமுதாயப் பார்வைகொண்ட கவிதைகளை அவர் எழுதினார்.
சண்முகம் சிவலிங்கத்தின் ஆரம்பகாலக் கவிதைகளும் யாப்பு மரபிலிருந்து முற்றாக விலகிவிடவில்லை. இவரது “அவள் நினைவு” (196
என்னும் கவிதை இவ்வாறு முடிகிறது:
‘சரசரெனும் மவடியில்
சருகுநிறக்கால் தெரியும்
அலையெறியும் பாவாடை
முழங்காலின் அழகுயரும்
நடைநடையே நடையதுவாய்
நடையினிலே கால் இரண்டு
விடமுடிய ஒரு நினைவாய்
விளையும் ஒரு மனத்திரையில்
கடல் அலைகள் மடிநோக்கி
கரையிலிருந்து மீள்வனவே.’
இக்கவிதையின் உருவம் மட்டுமல்ல, கவிதைக்கான விஷயமும் மரபார்ந்ததே.
வ.ஐ.ச.ஜெயபாலனின் ஆரம்பகாகக் கவிதைகளில் ஓன்றான “பாலி ஆறு நகர்கிறது” (196
கவிதையில் ஒரு பகுதி:
‘ஏதுமொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன்நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்
எண்ணற்ற வகைப்பறவை.
எழுப்பும் சங்கீதங்கள்
துள்ளி விழுந்து
‘துழும் என்னும் வரால் மீன்கள்.’
தொடர்ந்து வரும் மோனைகள், சப்த ஒழுங்குடன் கூடிய கவிதைகளுடன் தொடங்கிய இவரது கவிதைப்பயணம் எழுபதுகளிலேயே தீவிரம்கொள்கிறது.
இவர்கள் மூவரிலிருந்தும் கவிதையின் உருவ அமைப்பிலும் கவிதைக்கான மொழியிலும் வித்தியாசமாக அமைந்தவை அ.யேசுராசாவின் கவிதைகள். செய்யுள் நடையை விட்டு விலகிய உரைநடைத் தன்மையுடன் கூடிய கவிதை நடையில் எழுதத் தொடங்கியவர். தா.ராமலிங்கத்தின் புதுக்கவிதைகளைவிடவும் இவரது கவிதைகள் செறிவாகவும் இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்டவை. அவ்வகையில் தமிழகத்துப் புதுக்கவிதையமைப்பின் தாக்கத்தை இவர் கவிதைகளில் காணமுடியும். உதாரணமாக “கடவுளுக்கு” (196
கவிதை:
‘மூடிக்கிடக்கின்ற
சொர்க்கத்தின் கதவுகளைத்
திறந்துவிட்டால்…
மண்ணின் குரலுக்குக்
கேட்கக்கூடும்!
கீழிறங்கி
புழுதி மண்ணின் மேல்
நடந்து வந்தால்
மானிடத்தின்
எழுச்சிகளை வீழ்ச்சிகளை
முற்று முழுதாக
நீரறிதல் கூடும்- கூட
நீர்… வருவீரா?’
இவர்கள் நால்வரும் அறுபதுளின் பிற்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கியவர்கள். எழுபதுகளிலும் அதன் பின்னருமே இவர்களின் தனித்தன்மையும் கவிதையாளுமையும் அனுபவ வெளிப்படுத்தலின் தீவிரமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. மேலும் அறுபதுகளில் இவர்கள் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் குறைவானவைதான்.
ஒப்பீடுகள் :
1. புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன் [யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம்]
2. ஈழத்து நவீன இலக்கியம் - செல்லையா யோகராசா [கொழும்புத் தமிழ்ச் சங்கம்]




